உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரூ.1 கோடி நிலமோசடி வழக்கு முக்கிய குற்றவாளிகள் கைது

ரூ.1 கோடி நிலமோசடி வழக்கு முக்கிய குற்றவாளிகள் கைது

ஆவடி,:திருநின்றவூரில், 1 கோடி ரூபாய் மதிப்பிலான நிலமோசடி வழக்கில், முக்கிய குற்றவாளிகள் இருவரை போலீசார் கைது செய்தனர். திருநின்றவூர் அடுத்த மேலப்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசன், 70. இவரது தந்தை குப்புசாமி ரெட்டியார் என்பவருக்கு, மேலப்பேடு கிராமத்தில் குடும்ப சொத்தில் பாகப் பிரிவினையாக கிடைத்த 13 சென்ட் நிலம் இருந்தது. இந்த நிலத்தை, ஜெகதீசனின் சித்தப்பா மனைவி ரங்கம்மாள், அவரது மகள்கள் புஷ்பா, பார்வதி, கனகவல்லி மற்றும் புஷ்பாவின் மகன்கள் சீனிவாசன், டில்லிபாபு ஆகியோர், கடந்த 2011ல் போலி ஆவணங்கள் தயார் செய்து, சொத்தை தங்களுக்கு கிடைத்த பாகப்பிரிவினையாக மாற்றிக் கொண்டனர். ஜெகதீசன், தந்தையின் சொத்தில் தங்கைக்கு பாகப்பிரிவினை செய்து கொடுப்பதற்கு, கடந்த 2024ல் நிலத்தின் மீது வில்லங்க சான்றிற்கு விண்ணப்பித்துள்ளார். அப்போது, மேற்படி 13 சென்ட் நிலம் சித்தப்பா மனைவி ரங்கம்மாள், அவரது மகள்கள் புஷ்பா, பார்வதி, கனகவள்ளி ஆகியோர் பெயரில் இருந்தது தெரிந்தது. அந்த நிலத்தின் மதிப்பு 1 கோடி ரூபாய். அதிர்ச்சி அடைந்த ஜெகதீசன், இது குறித்து ஆவடி மத்திய குற்றப்பிரிவில் கடந்தாண்டு புகார் அளித்தார். புகாரை விசாரித்த இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா தலைமையிலான தனிப்படை போலீசார், மோசடிக்கு மூளையாக செயல்பட்ட மேலப்பேடு, திருவீதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த டில்லி பாபு, 45, ஸ்ரீனிவாசன், 42, ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், இருவரும் போலி ஆவணங்கள் தயார் செய்து, மோசடிக்கு மூளையாக செயல்பட்டது தெரிந்தது. இதையடுத்து, இருவரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர். ரங்கம்மாள் உள்ளிட்ட மற்றவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை