உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கிருஷ்ணா கால்வாய் கரைகள் மீண்டும் சேதம் செம்பரம்பாக்கம் ஏரி நீரின் தரம் கேள்விக்குறி

கிருஷ்ணா கால்வாய் கரைகள் மீண்டும் சேதம் செம்பரம்பாக்கம் ஏரி நீரின் தரம் கேள்விக்குறி

திருமழிசை:செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் கிருஷ்ணா கால்வாயில், கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில், நீர்வள ஆதாராத் துறையினரால் சீரமைக்கப்பட்ட கரைகள் மீண்டும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், செம்பரம்பாக்கம் ஏரி நீரின் தரம் கேள்விக்குறியாகி உள்ளது. பேரம்பாக்கம் அடுத்த கேசாவரம் அணைக்கட்டிலிருந்து உருவாகும் கூவம் ஆறு, அரண்வாயல் பகுதியில் கிருஷ்ணா கால்வாயாக பிரிந்து, தண்டலம் வழியாக செம்பரம்பாக்கம் ஏரியில் கலக்கிறது. இதில், தண்டலம் பகுதியில் தனியார் மருத்துவ கல்லுாரி மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், கிருஷ்ணா கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரியில் கலந்து வருகிறது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரி நீர் மாசடைந்து வருவதால், சென்னை மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக, நம் நாளிதழில் கடந்த மாதம் செய்தி வெளியானது. இதையடுத்து, திருவள்ளூர் நீர்வள ஆதாரத்துறையினர், கிருஷ்ணா கால்வாய்க்கு தனியார் மருத்துவ கல்லுாரியிலிருந்து கழிவுநீர் வரும் பகுதியில் உள்ள கரைகளை சீரமைத்து, கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்தினர். தற்போது, கிருஷ்ணா கால்வாயில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், சீரமைக்கப்பட்ட கரைகளை தனியார் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மற்றும் தனியார் தொழிற்சாலை நிர்வாகம் நேற்று சேதப்படுத்தியுள்ளது. இதனால், கிருஷ்ணா கால்வாயில் கழிவுநீர் சேகரமாகி வருகிறது. இது, செம்பரம்பாக்கம் ஏரி நீரின் தரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. எனவே, கலெக்டர் பிரதாப் ஆய்வு செய்து, கிருஷ்ணா கால்வாய் பகுதியில் கரைகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்தும் வகையில், கரைகளை பலப்படுத்த வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி