கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு கிருஷ்ணா நீர் திறப்பு
ஊத்துக்கோட்டை:தமிழக - ஆந்திர அரசுகள் இடையே. கடந்த 1983ம் ஆண்டு கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தம் போடப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் இரண்டு தவணைகளில், 12 டி.எம்.சி., நீர் தர வேண்டும். இதற்காக. கால்வாய் வெட்டும் பணி 13 ஆண்டுகள் நடந்தது.முதன் முறையாக, 1996ம் ஆண்டு தமிழகத்திற்கு கிருஷ்ணா நீர் வந்தது. தற்போது, சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், தேர்வாய்கண்டிகை - கண்ணன்கோட்டை ஆகிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைவாக உள்ளது.கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், சென்னைக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவானது. இதைத் தொடர்ந்து ஒப்பந்தப்படி, ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நீரை திறந்து விடுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டது.இதைத் தொடர்ந்து, கடந்த 24ம் தேதி காலை 11:30 மணிக்கு, கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டது.அங்கிருந்து ராப்பூர், வெங்கடகிரி, காளஹஸ்தி, வரதயபாளையம், சத்தியவேடு வழியே, 152 கி.மீ., துாரம் பயணித்து, நாளை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்டை அடையும் என, எதிர்பார்க்கப்படுவதாக நீர்வள ஆதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.