மேலும் செய்திகள்
முருகன் கோவில்களில் கிருத்திகை விழா கோலாகலம்
06-Mar-2025
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் நேற்று பங்குனி மாத கிருத்திகை விழாவை ஒட்டி, அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்ககிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.காலை 9:30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமானுக்கு, காவடி மண்டபத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகன் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுருந்தருளி, தேர்வீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நேற்று வழக்கத்திற்கு மாறாக, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேர்வீதியில் குவிந்தனர். பொதுவழியில் பக்தர்கள் மூலவரை தரிசிக்க, மூன்று மணி நேரத்திற்கு மேல் கொளுத்தும் வெயிலில், நீண்டவரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.அதேபோல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஒன்றரை மணி நேரம் காத்திருந்து, மூலவரை தரிசனம் செய்தனர். சில பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற மொட்டை அடித்தும், மயில், மலர் காவடிகள் எடுத்தும், உடலில் அலகு குத்தியும் தேர்வீதியில் சுற்றி வந்தனர்.மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, இருசக்கர வாகனங்கள் தவிர, மீதமுள்ள வாகனங்கள், மாலை 6:00 மணி வரை அனுமதிக்கப்படவில்லை. கோவில் நிர்வாகம் சார்பில் மூன்று பேருந்துகள் இயக்கப்பட்டன. வள்ளிமலை
வேலுார் மாவட்டம், பொன்னை அருகே அமைந்துள்ளது வள்ளிமலை. வள்ளிமலை அடிவாரம் மற்றும் மலை உச்சியில் வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணியசுவாமி அருள்பாலித்து வருகிறார்.நேற்று மலைக்கோவிலில், காலை 8:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.அதேபோல், பள்ளிப்பட்டு அடுத்த நெடியம் கஜகிரி செங்கல்வராயன் மலைக்கோவிலில், காலை 8:00 மணிக்கு உற்சவர் மற்றும் மூலவர் செங்கல்வராய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. ஊத்துக்கோட்டை
ஊத்துக்கோட்டை ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில் சன்னிதியில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி சன்னிதியில் உள்ள முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் தீபாராதனை நடந்தது.
06-Mar-2025