வி.ஏ.ஓ.,க்களுக்கு பணிச்சுமை அடங்கல் வழங்குவதில் தொய்வு
திருவாலங்காடு: கிராம் நிர்வாக அலுவலர்களான வி.ஏ.ஓ.,க்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி வழங்கப்பட்டதால், அடங்கல் வழங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. திருத்தணி தாலுகாவில் திருவாலங்காடு, கனகம்மாசத்திரம், மணவூர் உட்பட ஆறு வருவாய் குறுவட்டங்கள் உள்ளன. இங்கு, கார்த்திகை பட்டத்தில் 20,500 ஏக்கரில் நெல் சாகுபடி பணிகள் துவங்கியுள்ளன. விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் மகசூல் இழப்புகளுக்கு காப்பீடு வழங்க, வேளாண் சார்பில் காப்பீட்டு திட்டம் உள்ளது. இதனால், விவசாயிகள் ஆர்வமாக பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு, வி.ஏ.ஓ.,க்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், விவசாயிகளுக்கு உடனுக்குடன் அடங்கல் வழங்க முடியாமல் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.