சட்ட விழிப்புணர்வு முகாம்
பொன்னேரி:பொன்னேரி அடுத்த காட்டாவூர் பழங்குடி கிராமத்தில், பொன்னேரி வட்ட சட்ட பணிக்குழு மற்றும் சென்னை பல்லாவரம் வேல்ஸ் சட்டக்கல்லுாரி சார்பில், சட்ட ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.இதில், பொன்னேரி முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி பிரேமாவதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். பெண்களுக்கான உரிமைகள், பாதுகாப்பு சட்டங்கள், குழந்தைகளுக்கான உரிமைகள், தகவல் அறியும் சட்டம், பழங்குடி மற்றும் ஆதிதிராவிடர் மக்களுக்கான இலவச சட்ட ஆலோசனை மையங்கள் குறித்த பல்வேறு தகவல்களை விளக்கினார்.மேலும், அனைவரும் சட்டம் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். பின், பழங்குடி மக்கள் தங்கள் பகுதியில் உள்ள அடிப்படை பிரச்னைகள் குறித்து, நீதிபதியிடம் புகார் தெரிவித்தனர். அது தொடர்பாக, முகாமில் பங்கேற்ற காட்டாவூர் ஊராட்சி நிர்வாகத்திடம் உடனடியாக தெரிவிக்கப்பட்டு, உரிய தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது. இதில், ஏராளமான பழங்குடியின மக்கள் பங்கேற்று, சட்ட ஆலோசனை பெற்றனர்.