| ADDED : நவ 27, 2025 03:23 AM
திருத்தணி: 'திருத்தணி நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும்' என, நகராட்சி நிர்வாகம் நெடுஞ்சாலை, காவல் துறையினருக்கு கடிதம் அனுப்பி உள்ளது. திருத்தணி நகராட்சியில் முருகன் கோவில் மற்றும் அரசு அலுவலகங்கள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, வங்கிகள் மற்றும் ரயில் நிலையம் உள்ளதால், தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். பெரும்பாலானோர் வாகனங்களில் வருவதால், ம.பொ.சி.சாலை, அரக்கோணம் சாலை மற்றும் அக்கைய்ய நாயுடு சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு காரணம், நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து, நம் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, திருத்தணி நகராட்சி பொறுப்பு ஆணையர் சரவணகுமார், நேற்று திருத்தணி நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர், திருத்தணி இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், 'திருத்தணி - அரக்கோணம் சாலை, ம.பொ.சி.சாலை மற்றும் அக்கைய்யநாயுடு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்' என குறிப்பிடப் பட்டுள்ளது.