மல்லியங்குப்பம் கிராம மக்கள் பொங்கல் தொகுப்பு நிரகாரிப்பு
கும்மிடிப்பூண்டி:திருவள்ளூர் மாவட்டம், ஆரணி அருகே உள்ளது மல்லியங்குப்பம் ஊராட்சி. அந்த ஊராட்சியில், 390 குடும்பங்களைச் சேர்ந்த, 1,100 பேர் வசித்து வருகின்றனர். விவசாயம் மட்டுமே பிரதான வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். மேலும், 90 சதவிகித குடும்பத்தினர், நுாறு நாள் வேலை பார்த்து வருகின்றனர்.இந்நிலையில், மல்லியங்குப்பம் ஊராட்சியை, ஆரணி பேரூராட்சியுடன் இணைக்கும் அறிவிப்பை, தமிழக அரசு வெளியிட்டது. அறிவிப்பு வெளியான மறு தினமே, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டனர்.நாறு நாள் வேலை பாதிப்பு, குடிநீர், சொத்து வரி அதிகரிப்பு, ஊராட்சிகளுக்கான சலுகைகள் பறிப்பு போன்ற காரணங்களை முன்வைத்து மல்லியங்குப்பம் ஊராட்சியை ஆரணி பேரூராட்சியுடன் இணைக்கக்கூடாது என, கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதன் மீது கலெக்டர் முதல், துறை சார்ந்த அமைச்சர் வரை மனு கொடுத்தனர்.இந்நிலையில், தமிழக அரசு சார்பில், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன்களை அந்த கிராம மக்கள் பெறவில்லை.இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், 'மல்லியங்குப்பம் ஊராட்சியை, ஆரணி பேரூராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை எதிர்க்கும் விதமாக, பொங்கல் பரிசு தொகுப்பை நிராகரித்து விட்டோம். இணைப்பு திட்டத்தை திரும்ப பெறும் வரை தொடர்ந்து எங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்' என, தெரிவித்தனர்.