ஆன்லைன் ரம்மியால் வினை ரூ.6 லட்சம் இழந்தவர் தற்கொலை
புழல்:புழல் அடுத்த புத்தகரம், தங்கவேல் நகரைச் சேர்ந்தவர் முருகன், 23; தனியார் வங்கி ஊழியர். இவர், 'ஆன்லைன்' ரம்மி உள்ளிட்ட விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்டிருந்ததாக தெரிகிறது.நாளடைவில் அவர் சேர்த்து வைத்திருந்த லட்சக்கணக்கான ரூபாயை இழந்துள்ளார். இதனால், சிலரிடம் கடன் வாங்கி, அதை திருப்பி கொடுக்க முடியாமல் அவதியடைந்துள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். கட்டட வேலைக்கு சென்ற அவரது தாய், வீட்டிற்கு வந்து கதவை தட்டியுள்ளார். கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது, முருகன் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது.புழல் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். முருகனின் வீட்டிலிருந்து கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர்.அதில், 'ஆன்லைன்' விளையாட்டில், 6 லட்சம் ரூபாய் வரை பறிகொடுத்து விட்டேன். இதனால் நிம்மதி இழந்து என்னால் வாழ முடியவில்லை' என எழுதியிருந்ததாக தெரிகிறது. புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.