சாலை விரிவாக்க பணியில் அலட்சியம் மண் குவியலில் மோதியவர் உயிரிழப்பு
ஆர்.கே.பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ராம்நகரைச் சேர்ந்தவர் ராஜா, 40. இவர், நேற்று முன்தினம் மாலை சோளிங்கரில் இருந்து சித்துார் செல்லும் சாலையில், சகஸ்ரபத்மாபுரம் வழியாக 'பல்சர்' இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.இந்த பகுதியில், சித்துார் - திருத்தணி மாநில நெடுஞ்சாலையை நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்காக, சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள மண் குவியலில், ராஜாவின் இருசக்கர வாகனம் மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த ஆர்.கே.பேட்டை போலீசார், ராஜாவின் சடலத்தை மீட்டு, சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.கே.ஜி.கண்டிகை அருகே தடுப்புகள் இன்றி சாலை விரிவாக்க பணிகள் நடந்து வந்த பகுதியில், கடந்த மார்ச் 7ம் தேதி பேருந்து மற்றும் லாரி நேருக்கு நேராக மோதி விபத்தில் சிக்கின. இதில், ஐந்து பேர் உயிரிழந்தனர். 27 பேர் படுகாயமடைந்தனர். இந்த சாலை விரிவாக்க பணி, அஸ்வரேவந்தாபுரம் பகுதியிலும் அலட்சியமாக மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்து, நம் நாளிதழில் ஏற்கனவே செய்தி வெளியானது. நேற்று முன்தினம் சகஸ்ரபத்மாபுரம் அருகே, ராஜா என்பவர் விபத்தில் பலியானார்.எனவே, சாலை விரிவாக்க பணியை உரிய பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.