பப்பாளி பறித்தபோது தவறி கிணற்றில் விழுந்தவர் மீட்பு
மதுரவாயல்;பப்பாளி பறிக்கும்போது, 20 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த நபரை தீயணைப்பு துறையினர் மீட்டனர். மதுரவாயல் வேல்நகர், 10வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன், 55. இவரது வீட்டின் பின்புறம், 3 அடி விட்டம் மற்றும் 20 அடி ஆழம் கொண்ட உறைக்கிணறு உள்ளது. அந்த கிணற்றின் மேற்பரப்பில் கான்கிரீட், 'ஸ்லாப்' போட்டு மூடி வைத்திருந்தனர். சீனிவாசன் நேற்று காலை, கிணற்றின் ஸ்லாப் மீது ஏறி நின்று பப்பாளி பறித்தபோது, ஸ்லாப் உடைந்து, கிணற்றில் தவறி விழுந்தார். தகவல் அறிந்து வந்த மதுரவாயல் தீயணைப்பு வீரர்கள், கிணற்றில் ஏணியை இறக்கி, சீனிவாசனை மீட்டனர். சிராய்ப்பு காயங்களுடன் சீனிவாசன் உயிர் தப்பினார்.