துார்ந்த ஆற்று வரவு கால்வாய் மணவூர் விவசாயிகள் தவிப்பு
திருவாலங்காடு:ஆந்திர மாநிலத்தில் உருவாகி தமிழகத்தின் பள்ளிப்பட்டு, திருத்தணி, திருவாலங்காடு ஒன்றியத்தை கடந்து கொசஸ்தலை ஆற்று நீர், பூண்டி நீர்த்தேக்கத்தை சென்றடைகிறது.இந்த ஆற்று நீர் பல ஏரிகளுக்கு கால்வாய் வழியாக நீர் பங்களிப்பை அளித்து வருகிறது. அதன்படி திருவாலங்காடு ஒன்றியம், ஒரத்துார் கொசஸ்தலை ஆற்றில் இருந்து, ஒரத்துார், மருதவல்லிபுரம் வழியாக, மணவூர் ஏரிக்கு ஆற்று நீர் செல்ல நீர்வரத்து கால்வாய் உள்ளது.பொதுப்பணித் துறையின் கீழ் வரும் இந்த கால்வாய், 3 கி.மீ நீளமும், 3-10 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த கால்வாய், 10 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி உள்ளதால் ஆங்காங்கே துார்ந்தும் புதர்மண்டியும் காணப்படுகிறது. இதனால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் ஏரிக்கு ஆற்றுநீர் செல்வதில்லை. இதனால், மூன்றாம் போகத்தில் மணவூர் ஏரியை நம்பி விவசாயம் செய்வோர் நீரின்றி தவிக்கின்றனர்.இந்த ஏரி நீர் வரத்து கால்வாயை, துார்வாரி சீரமைப்பதன் வாயிலாக, 750க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும்.எனவே, இந்த கால்வாயை சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.