மருத்துவ பணியாளருக்கு குடியிருப்பு இல்லை சிரமங்களை அனுபவிப்பதாக குமுறல்
திருவாலங்காடு:திருவாலங்காடு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மருத்துவ பணியாளருக்கு குடியிருப்பு அமைக்காததால் சிரமங்களை அனுபவிப்பதாக தெரிவித்து உள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடில், 24 மணி நேரமும் இயங்கும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 2021ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு அதே ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது. இங்கு தினமும் நுாற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு வேலை பார்க்கும் செவிலியர், மருத்துவர் வசதிக்காக, ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் குடியிருப்பு கட்ட அதே ஆண்டு தீர்மானிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளாகியும் இது வரை குடியிருப்பு கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மருத்துவ பணியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் குடியிருப்பு வசதி இல்லாததால் இரவு நேர பணியின் போது பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குடியிருப்பு அமைக்க வேண்டும் என, வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து திருவாலங்காடு வட்டார மருத்துவ அலுவலர் பிரகலாதன் கூறுகையில், ''குடியிருப்பு அமைப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்றார்.