தடப்பெரும்பாக்கம் ஊராட்சி நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து கூட்டம்
பொன்னேரி:மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தாத தடப்பெரும்பாக்கம் ஊராட்சியை கண்டித்து, மா.கம்யூ., கட்சி சார்பில் கண்டன கூட்டம் நடந்தது.மீஞ்சூர் ஒன்றியம், தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் மக்களின் அடிப்படை வசதிகளை சரிசெய்யாத நிர்வாகத்தை கண்டித்து, மா.கம்யூ, கட்சி சார்பில், நேற்று கண்டன கூட்டம் நடந்தது.கூட்டத்தில் நிர்வாகிகள் பேசியதாவது:தடப்பெரும்பாக்கம் ஓடை கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை செயல்படுத்துவதிலும், திருவேங்கடபுரத்தில், 10 லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பயனுக்கு கொண்டு வருவதிலும் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.திருவேங்கிடபுரம் சுடுகாட்டில் மின்விளக்கு வசதி, தண்ணீர் வசதி இல்லை. பல மாதங்களாக உயர்கோபுர மின்விளக்குகள் பழுதடைந்து, சீரமைக்கப்படாமல் உள்ளன. தடப்பெரும்பாக்கம் ஏரியில், கோரை என்ற பெயரில் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியின் துணையோடு மணல் கொள்ளை நடக்கிறது.நுாறு நாள் வேலை வழங்கப்படாமல் உள்ளது. ஊராட்சியில் பணிபுரியும் பம்ப் ஆப்பரேட்டர்கள், துாய்மை பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் மாத சம்பளம் வழங்கப்படுவதில்லை. மாவட்ட நிர்வாகம் இவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.