நல்லுார் சாலையில் மெகா பள்ளம் வாகன ஓட்டிகள் தடுமாற்ற பயணம்
சோழவரம்: நல்லுார் பிரதான சாலையின் பல்வேறு பகுதிகளில் பள்ளங்கள் ஏற்பட்டு, அதில் மழைநீர் தேங்கி இருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர். சோழவரம் அடுத்த டோல்கேட் பகுதியில் இருந்து நல்லுார் பகுதிக்கு செல்லும் பிரதான சாலையின் பல்வேறு பகுதிகளில் பள்ளங்கள் ஏற்பட்டு சீரமைக்கப்படாமல் உள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். தற்போது, இந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கியிருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர். பள்ளங்களை தவிர்க்க வலது, இடது என, மாறி மாறி பயணிக்கும்போது, எதிரில் வரும் வாகன ஓட்டிகளும் சிரமப்படுகின்றனர். கார், வேன் உள்ளிட்டவை பள்ளங்களில் சிக்கி பழுதாகின்றன. ஊராட்சி அலுவலகம், சிறு தொழில் நிறுவனங்கள், குடிநீர் ஆலைகள் உள்ளிட்டவை இச்சாலையில் அமைந்துள்ளன. சென்னையின் குடிநீர் ஆதாரமான சோழவரம் ஏரிக்கும், இச்சாலை வழியாக தான் செல்ல வேண்டும். இந்நிலையில், சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதால், பல்வேறு தரப்பினர் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, சோழவரம் ஒன்றிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.