உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர் மாவட்டத்தில் மினி பஸ் சேவை... துவங்கியது முதற்கட்டமாக 5 வழித்தடத்தில் பேருந்து இயக்கம்

திருவள்ளூர் மாவட்டத்தில் மினி பஸ் சேவை... துவங்கியது முதற்கட்டமாக 5 வழித்தடத்தில் பேருந்து இயக்கம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில், பொது போக்குவரத்து இல்லாத பகுதிகளில், 'மினி பஸ்' சேவை இயக்க, 49 வழித்தடங்கள் கண்டறியப்பட்டன. அவற்றில், 76 பேருக்கு 'பெர்மிட்' வழங்கிய நிலையில், முதற்கட்டமாக ஐந்து வழித்தடங்களில் 'மினி பஸ்' சேவை, நேற்று துவக்கி வைக்கப்பட்டது.திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் பொன்னேரி ஆகிய விழுப்புரம் கோட்ட போக்குவரத்து பணிமனைகளில் இருந்து, அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.மேலும், கணிசமான அளவிற்கு தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இருப்பினும், மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளுக்கு உட்பட்ட, 2,600க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன.

அனுமதி

இவற்றில் பெரும்பாலான கிராமங்களுக்கு பொது போக்குவரத்து வசதியில்லாததால், ஷேர் ஆட்டோக்களில் மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.இந்த நிலையில், தமிழகத்தில் பேருந்து சேவை இல்லாத வழித்தடங்களில் சிற்றுந்து இயக்கும் வகையில், புதிய விரிவான 'மினி பஸ் திட்டம் - 2024ஐ' தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன்படி, பேருந்து வசதியில்லாத, மக்கள் தொகை 100 பேர் மற்றும் அதற்கு அதிகமான குடும்பங்கள் உள்ள கிராமம், குக்கிராமங்கள் மற்றும் குடியிருப்புகள் கொண்ட பகுதியில், ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.இதன் வாயிலாக, அருகிலுள்ள முக்கிய பேருந்து நிலையம், நகரம், பெருநகரங்களுக்கு சென்றடைவதற்கு ஏதுவாக பேருந்து வசதி உறுதிபடுத்தப்படும்.அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பேருந்து சேவை இல்லாத வழித்தடங்களில், சிற்றுந்து சேவை வழங்கும் பொருட்டு, 49 புதிய வழித்தடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன.குறைந்தபட்சம் 7 கி.மீ., இருந்து அதிகபட்சம் 25 கி.மீ., துாரத்திற்கு சிற்றுந்து சேவை இயக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே உள்ள பழைய மற்றும் புதிய வழித்தடம் என, மொத்தம் 49 வழித்தடங்களில், சிற்றுந்து சேவை இயக்கப்பட உள்ளது.இதற்கான விரிவான அறிக்கை, கடந்த பிப்., 21ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 49 வழித்தடங்களில், சிற்றுந்து இயக்க விரும்பும் தனியார் சிற்றுந்து உரிமையாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

'பெர்மிட்'

அவற்றை மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர், செங்குன்றம் மற்றும் பூந்தமல்லி வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பரிசீலனை செய்தனர். இதில், 146 பேர் சிற்றுந்து இயக்க விண்ணப்பித்திருந்தனர். அவற்றில், 76 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, 'பெர்மிட்' வழங்கப்பட்டது.ஜூன் மாதம் முதல் சிற்றுந்து சேவை துவங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சேவை துவக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், தஞ்சாவூரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், மாநிலம் முழுதும் சிற்றுந்து சேவையை நேற்று துவக்கி வைத்தார்.

11 வழித்தடங்கள்

திருவள்ளூர் மாவட்டத்திலும் சிற்றுந்து சேவை நேற்று துவக்கி வைக்கப்பட்டது. கலெக்டர் பிரதாப் முன்னிலையில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர், நேற்று கொடியசைத்து சிற்றுந்து சேவையை துவக்கி வைத்தார்.அதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 29 வழித்தடங்களில் சிற்றுந்து சேவையை, அமைச்சர் காந்தி நேற்று துவக்கி வைத்தார்.செங்கல்பட்டு மாவட்டத்தில் 50 தடங்களில் தனியார் மினி பேருந்து இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக 11 வழித்தடங்களில் சிற்றுந்து சேவை துவக்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக, திருத்தணி இஸ்லாம் நகர் - சென்னை, திருப்பதி சாலை ரவுண்டானா, செங்குன்றம் - வெளிவட்ட சாலை புழல் முகாம், பூந்தமல்லி - புழல், ஆவடி - கன்னடபாளையம், திருநின்றவூர் பேருந்து நிலையம் - செங்குன்றம் உள்ளிட்ட வழித்தடங்களுக்கான சேவை துவக்கி வைக்கப்பட்டது. மீதமுள்ள வழித்தடங்களுக்கான சேவை, படிப்படியாக துவக்கி வைக்கப்படும்.- நாசர்,சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்.

சென்னையில் 11 சிற்றுந்துகள்

சென்னையில் முதன் முறையாக தனியார் சிற்றுந்து சேவை நேற்று துவங்கப்பட்டது. முதற்கட்டமாக, 11 பஸ்கள் மட்டுமே துவங்கப்பட்டுள்ளது.சென்னை வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட அம்பத்துார், பூந்தமல்லி, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் 33 வழித்தடங்கள், சென்னை தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட சோழிங்கநல்லுார், திருவான்மியூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 39 வழித்தடங்கள் என 72 வழித்தடங்களில் தனியார் சிற்றுந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன. சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையரக அலுவலகத்தில், மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் சுப்பிரமணியன் 11 சிற்றுந்துகளை கொடியசைத்து துவங்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Bhaskaran
ஜூன் 17, 2025 12:04

ஆட்டோ காரங்க அனியாயம் ஒழிக்கப்பட வேண்டும் ஒரு நகருக்குள் பத்துமினி பேருந்துகள்சற்றி சுற்றி வருமாறு இயக்கப்படவேண்டும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை