தன்னம்பிக்கையுடன் விளையாட மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுரை
திருவாலங்காடு: திருவள்ளூர் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 2,412 பேருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நேற்று நடந்தது.திருவள்ளூர் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு என 5 பிரிவுகளின் கீழ் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.கடந்த 10ம் தேதி முதல், 24ம் தேதி வரை நடந்தது. இதில் 5 பிரிவுகளில் இருந்து 10,949 ஆண்கள், 3,196 பெண்கள் என மொத்தம் 14,783 பேர் பங்கேற்றனர். இதில் வெற்றிப்பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த 2,412 பேருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா திருவள்ளூர் அடுத்த பட்டரைப்பெரும்புதூரில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி கூட்டரங்கில் நேற்று நடந்தது.விழாவிற்கு கலெக்டர் பிரபு சங்கர் தலைமை தாங்கினார். தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன் அமைச்சர் நாசர் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கினார்.பின் அவர் பேசியதாவது:தேசிய அளவில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்குடன் முதல்வர் விளையாட்டு துறையை மேம்படுத்தி வருகிறார். சேலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாரியப்பன் சர்வதேச அளவில் தங்கம் வென்று மாநிலத்திற்கு பெருமை சேர்த்தார்.அதுபோல நீங்களும் தன்னம்பிக்கையுடன் விளையாடி வெற்றி பெற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இதில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சேதுராஜன், மாவட்ட தடகள பயிற்றுனர் லாவண்யா உட்பட பலர் பங்கேற்றனர்.