மின் கம்பங்களில் விளம்பர பலகை விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
திருவள்ளூர்:மின் கம்பங்களில் விதிகளை மீறி, விளம்பர பலகைகள் அமைக்கப்பட்டு வருவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில், மின் விபத்துகளை தவிர்க்க, மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மின்வாரிய துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், அத்துறையினரே, மின் விபத்து ஏற்படும் வகையில், விதிமீறல்களை கண்டும் காணாமல் உள்ளனர். மின் கம்பங்களில், விளம்பர பலகைகள் அமைப்பது திருவள்ளூர் மாவட்ட பகுதியில், அதிகரித்துள்ளது. திருவள்ளூர் நகரப்பகுதி மற்றும் திருமழிசை, கடம்பத்துார், திருப்பதி நெடுஞ்சாலை உட்பட நகரின் முக்கிய ரோடுகளிலுள்ள அனைத்து மின்கம்பங்களும் விளம்பர பலகைகள் மாட்ட பயன்படும் ஸ்டாண்டாக மாற்றப்பட்டுள்ளது. இத்தகைய பலகைகள், மின் கம்பத்தின் மையப்பகுதியில், கட்டப்படுவதால், பழுது நீக்குவதற்காக, மின்கம்பத்தில் ஏற பணியாளர்கள் திணறி வருகின்றனர். மழைக்காலத்தில், இந்த பலகைகள் மின்விபத்து ஏற்படுத்தும் என தெரிந்தும், மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. சில இடங்களில், டிரான்ஸ்பார்மரிலும் விளம்பர பலகைகள் கட்டப்படுகின்றன. இத்தகைய விளம்பர பலகைகளை பாரபட்சமில்லாமல் அகற்ற, மின்வாரிய அதிகாரிகள் உத்தரவிட்டால் மட்டுமே, மின்வாரிய பணியாளர்களும், மக்களும், மின் விபத்து அச்சத்திலிருந்து விடுபட முடியும். எனவே, மாவட்ட நிர்வாகம் மின் கம்பங்களில் விளம்பர பேனர்கள் கட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.