தடுப்புச்சுவர் இல்லாத சாலையோர குளம் விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள்
பொன்னேரி:சாலையோர குளத்திற்கு தடுப்புச்சுவர் இல்லாததால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.பொன்னேரி அடுத்த அகரம் கிராமத்தில், அண்ணாமலைச்சேரி - தேவம்பட்டு சாலையை ஒட்டி, ஊர் பொதுக்குளம் அமைந்துள்ளது.குளத்தில் எப்போதும் தண்ணீர் தேங்கி இருப்பதால், கிராம மக்ககளின் பல்வேறு தேவைகளுக்கும், கால்நடைகளின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.சாலையோரத்தில் இருந்த இந்த குளத்திற்கு தடுப்புச் சுவர் மற்றும் எந்தவொரு எச்சரிக்கையும் இல்லை.சாலையின் வளைவு பகுதியில் குளம் இருப்பதால், வேகமாக பயணிக்கும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்தால், அசம்பாவிதங்களில் சிக்கும் அபாயம் உள்ளது.அரசு பேருந்துகள், பள்ளி வாகனங்கள், பிற வாகனங்கள் என தொடர் வாகன போக்குவரத்து இருக்கும் நிலையில், பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. அசம்பாவிதங்கள் நேரிடும் முன், சாலையோர பகுதி முழுதும் தடுப்புச்சுவர் அல்லது இரும்பு தடுப்புகள் அமைக்கவும், அவற்றில் ரிப்ளக்டர்கள் பொருத்தவும் நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.