நெடுஞ்சாலையோரம் கழிவுநீர் நோய் அபாயத்தில் வாகன ஓட்டிகள்
திருமழிசை:சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையோரம் குவிந்து வரும் குப்பை மற்றும் கழிவுநீரால் ஏற்படும் துர்நாற்றத்தால் வாகனங்களில் செல்வோர் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை-பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஒரு லட்சத்திற்கு அதிகமாகன வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் 20க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் செல்லும் வகையில் இருவழிப்பாதை இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது.இந்த இணைப்பு சாலை பகுதியில் பூந்தமல்லி, திருமழிசை, குத்தம்பாக்கம் மற்றும் நசரத்பேட்டை, வரதராஜபுரம், செட்டிபேடு, பாப்பன்சத்திரம்.தண்டலம், இருங்காட்டுகோட்டை உட்பட பல பகுதிகளின் இணைப்பு சாலை பகுதிகள் குப்பை கிடங்காக மாறி வருகிறது. சில இடங்களில் நெடுஞ்சாலையோரம் கழிவுநீரும் குளம்போல் தேங்கி உள்ளது.இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் இணைப்பு சாலையில் செல்லும் பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருவதோடு தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.எனவே, சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள் இணைப்பு சாலை பகுதியில் ஆய்வு செய்து குப்பையை அகற்றவும் கொட்டப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.