தடுப்புச்சுவர் இல்லாத கால்வாய் வாகன ஓட்டிகள் அச்சம்
திருவள்ளூர்: தலக்காஞ்சேரி சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாயில், தடுப்புச் சுவர் இல்லாததால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். திருவள்ளூர் நகராட்சி, காமராஜர் சாலையில் இருந்து தலக்காஞ்சேரி கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இச்சாலையின் இருபகுதியிலும், திருமண மண்டபங்கள், நெல் அரவை மில், தனியார் மற்றும் நகராட்சி பள்ளிகள் அமைந்துள்ளன. மேலும், சாலையோரம் உள்ள, பெரும்பாக்கம் காலனியில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இச்சாலை வழியாக பள்ளி மாணவ, மாணவியர், பகுதி மக்கள் மற்றும் தலக்காஞ்சேரி கிராம மக்கள் என, தினமும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றன. மேலும், இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள், ஆட்டோ மற்றும் வேன்கள் என, தினமும் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையோரம் மழைநீர் கால்வாய் அமைந்துள்ளது. குறுகலான சாலையோரம் உள்ள இக்கால்வாயில் தடுப்புச் சுவர் எதுவும் இல்லாமல், திறந்த நிலையில் உள்ளது. இதனால், நான்கு சக்கர வாகனங்கள் வரும்போது, நடந்து செல்வோர் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்வோர், அச்சத்துடன் செல்கின்றனர். எனவே, கால்வாய் ஓரம், சம்பந்தப்பட்ட துறையினர் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.