கால்வாய் பாலம் சேதம் வாகன ஓட்டிகள் அச்சம்
பொன்னேரி:பொன்னேரி அடுத்த அனுப்பம்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து அக்கரம்பேடு வழியாக வெள்ளம்பாக்கம், மேட்டுக்காலனி, கல்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் ஒன்றிய சாலை உள்ளது.இதில் அனுப்பம்பட்டு பகுதியில் மழைநீர் செல்லும் கால்வாயின் குறுக்கே இந்த சாலை பயணிக்கிறது. இதற்காக அங்குள்ள சிறுபாலம் பராமரிப்பு இன்றி சேதம் அடைந்து வருகிறது.பாலத்தின் மேற்பரப்பு உள்வாங்கி இருப்பதால், அதில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி இருக்கிறது. இதன் வழியாக சென்று வரும் வாகனங்கள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றன.பாலத்தின் இருபுறமும் மரம், செடிகள் சூழ்ந்து கிடப்பதால் உறுதிதன்மையும் கேள்விக்குறியாகி வருவதுடன், மழைநீர் நீர்நிலைகளுக்கு சென்று சேர்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.பாலம் பாதிப்பிற்கு உள்ளானால், கிராமவாசிகளின் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அபாயம் உள்ளது. உடனடியாக பாலத்தை ஆய்வு செய்து புதுபிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.