சாலையோரம் மண் குவிப்பு அச்சத்தில் வாகன ஓட்டிகள்
பொன்னேரி, பொன்னேரி - மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலையில், சவுடு மண் குவிக்கப்பட்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். பொன்னேரி - மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலையில், சாணார்பாளையம் கிராமம் அருகே, லாரிகளில் கொண்டு வரப்பட்ட சவுடு மண் சாலையோரம் கொட்டப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக சவுடு மண் அகற்றப்படாமல் உள்ளது. பொன்னேரியில் இருந்து மீஞ்சூர் நோக்கி வேகமாக பயணிக்கும் வாகன ஓட்டிகள், வளைவு பகுதியில் மண் குவிந்து கிடப்பதை கண்டு தடுமாற்றம் அடைகின்றனர். இரவு நேரங்களில் சாலையில் மண் குவிக்கப்பட்டு இருப்பது தெரிவதில்லை. இதனால் வாகனங்கள், மண் குவியலில் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதே பகுதியில், டாஸ்மாக் கடை உள்ளது. கடைக்கு வரும் 'குடி'மகன்கள் விபத்தில் சிக்கும் வாய்ப்புள்ளது. இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது: குவாரிகளில் இருந்து மண் எடுத்து வந்த லாரி ஓட்டுனர்கள், சாலையோரம் எதற்காக சவுடு மண்ணை கொட்டி சென்றனர் என தெரியவில்லை. இந்த மண், 10 நாட்களாக அகற்றப்படாமல் உள்ளது. இதை, நெடுஞ்சாலை துறையினரோ, போக்குவரத்து போலீசாரோ கண்டுகொள்ளவில்லை. எனவே, ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.