முருகன் கோவில் சாலை பணி சீரமைப்பு பணிகள் துவக்கம்
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். பெரும்பாலான பக்தர்கள் இருசக்கர வாகனம், கார், வேன், ஆட்டோ மற்றும் பேருந்துகள் வாயிலாக மலைக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.நான்கு மாதங்களுக்கு முன் மலைக்கோவிலின் படா செட்டி குளத்தில் இருந்து, கார், இருசக்கர வாகன நிறுத்தம் வரையுள்ள, 150 மீட்டர் துாரம் தார்ச்சாலை சேதமடைந்தது. இதனால், வாகன ஓட்டிகள் அப்பகுதியில் அச்சத்துடன் கடந்து செல்வதும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வந்தது.நேற்று இச்சாலை பகுதியில் உள்ள பழுதடைந்த சாலை சீரமைப்பு பணிகள், 8.50 லட்சம் ரூபாய் மதிப்பில் துவங்கியது. பொக்லைன் இயந்திரம் வாயிலாக சாலை விரிவாக்கம் மற்றும் சீரமைப்பு பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகிறது.இப்பணிகள் ஒரு வாரத்திற்குள் முடிக்கப்பட உள்ளதாக, கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சாலை பணிகள் நடக்கும் இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 'பேரிகேட்' போட்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.