உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குறுகிய கால்வாய் பாலம் மழைநீர் செல்வதில் சிக்கல்

குறுகிய கால்வாய் பாலம் மழைநீர் செல்வதில் சிக்கல்

பொன்னேரி:பொன்னேரி அடுத்த பெரியகாவணம், கூடுவாஞ்சேரி, காட்டாவூர் வழியாக, மெதுார் ஏரிக்கு மழைநீர் செல்லும் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயின் குறுக்கே, காட்டாவூர் - உப்பளம் சாலையில், வாகன போக்குவரத்திற்காக, கடந்த 2020ல் சிறுபாலம் அமைக்கப்பட்டது.கால்வாயின் அகலம், 30 அடியாக உள்ள நிலையில், 3 அடி அகலத்தில் குறுகலாக சிறு பாலம் அமைக்கப்பட்டதால், விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். இதனால், மழைக்காலங்களில் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படும் என, நீர்வளம் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினரிடம் புகார் தெரிவித்தனர்.அது தொடர்பாக எந்த நடவடிக்கை எடுக்காத நிலையில், நான்கு ஆண்டுகளாக மெதுார் ஏரிக்கு மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு, கோடைக்காலத்திற்கு முன்பே வறண்டு விடுகிறது. மேலும், மழைக்காலங்களில் குறுகிய பாலத்தின் வழியாக மழைநீர் செல்ல முடியாமல், கரைகளை கடந்து, அருகில் உள்ள விவசாய நிலங்களில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:மெதுார், விடதண்டலம், மேலப்பட்டறை உள்ளிட்ட கிராமங்கள், மெதுார் ஏரியில் தேங்கும் மழைநீரை விவசாயத்திற்கு பயன்படுத்துகின்றன. மேலும், மெதுார் ஏரியின் கரையோரங்களில் ஆழ்துளை மோட்டார்கள் அமைத்து, கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக, பழவேற்காடு மீனவ கிராமங்களுக்கு குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது.இந்நிலையில், மெதூர் ஏரிக்கு மழைநீர் வரும் கால்வாய் பாலம் குறுகலாக இருக்கிறது. இது தொடர்பாக, அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. நடப்பாண்டு மழைக்காலத்திற்குள், மேற்கண்ட கால்வாய் பாலத்தை விரிவுபடுத்தி, மழைநீர் செல்ல, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை