டெங்குவை தடுக்க மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம்
திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சி பகுதியில் உள்ள 31 பள்ளிகளில், 20,648 மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். தற்போது, மழைக்காலம் துவங்க உள்ள நிலையில், முன்னதாகவே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், கொசு உற்பத்தியாகி, டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய் பரவும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து, கலெக்டர் பிரதாப் உத்தரவின்படி, திருவள்ளூர் நகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகளில் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டு வருகிறது. நகராட்சி சுகாதார அலுவலர் மோகன் கூறியதாவது: திருவள்ளூர் நகராட்சியில் உள்ள அனைத்து பள்ளி மாணவ - மாணவியருக்கும் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, 5 நாட்களுக்கு கஷாயம் வழங்கப்படும். இதன் வாயிலாக, இரண்டு மாதம் வரை, அவர்களுக்கு காய்ச்சல் ஏற்படாமல், நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். இதுவரை, 11 பள்ளிகளில் பயிலும், 4,858 பேருக்கு வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.