செயல்படாத ஆதார் மையம் கடம்பத்துார் மக்கள் சிரமம்
கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றிய அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள ஆதார் மையம், 20 நாட்களாக செயல்படாததால், மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். கடம்பத்துார் ஒன்றிய அலுவலக வளாகத்தில், குறுகிய இடத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆதார் மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட 43 ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள் ஆதார் அட்டை திருத்தம், புதிய ஆதார் அட்டை போன்ற பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். மாடிக்கு செல்லும் வழியில், குறுகிய இடத்தில் இயங்கி வந்தாலும், பகுதி மக்கள் மிகுந்த சிரமத்தோடு ஆதார் மையம் சென்று தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர். கடந்த 20 நாட்களாக ஆதார் மையத்தில் இயங்கி வந்த கம்ப்யூட்டர் பழுதடைந்ததால், ஆதார் திருத்தம் செய்ய வரும் மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, சம்பந்தப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம், ஆதார் மையத்தில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடம்பத்துார் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.