அதிகாரிகள் அலட்சியம் அகூரில் குடிநீர் தட்டுப்பாடு
திருத்தணி:திருத்தணி ஒன்றியம், அகூர் கிராமம், கால்வாய் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் வசதிக்காக இரண்டு குடிநீர் தொட்டிகள் அமைத்து, மின்மோட்டார் வாயிலாக தண்ணீர் நிரப்பி குழாய்களில் வினியோகம் செய்யப்படுகிறது.இந்நிலையில், இரண்டு மாதமாக மின்மோட்டார் பழுதானதால், தொட்டிகளுக்கு தண்ணீர் நிரப்ப முடியாததால், அப்பகுதியினர் குடிநீரின்றி தினமும் தவித்து வருகின்றனர்.டிராக்டர் வாயிலாக வினியோகம் செய்யப்படும் குடிநீரை மக்கள் பணம் கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.மின்மோட்டார் பழுது மற்றும் குடிநீர் தட்டுப்பாடு என, திருத்தணி ஒன்றிய அதிகாரிகளிடம் அகூர் மக்கள் தெரிவிக்கும் போது, ஊராட்சியில் நிதி இல்லை என, அலட்சியமாக பதில் கூறுகின்றனர்.ஒரிரு நாளில், குடிநீர் வினியோகம் செய்யாமல் இருந்தால், ஒன்றிய அலுவலகம் முற்றுகை மற்றும் மறியல் போராட்டம் நடத்துவோம் என, அகூர் கால்வாய் தெரு மக்கள் தெரிவித்துள்ளனர்.எனவே, அகூர் கிராம மக்களுக்கு விரைந்து குடிநீர் வழங்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.