பழைய பொருட்கள் சேமிப்பு கிடங்கு தீக்கிரை
கும்மிடிப்பூண்டி :கும்மிடிப்பூண்டி அருகே சூரவாரிகண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் கமல், 45. அதே கிராமத்தில், அவருக்கு சொந்தமான இடத்தில், பழைய பொருட்களை சேகரிக்கும் கிடங்கு வைத்துள்ளார்.இங்கு பிளாஸ்டிக், அட்டை உள்ளிட்ட பழைய பொருட்கள் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு, கிடங்கு திடீரென தீப்பற்றி எரிந்தது. மளமளவென பரவிய தீ, கட்டுக்கு அடங்காமல், 40 அடி உயரத்திற்கு கொளுந்து விட்டு எரிந்தது.தகவல் அறிந்து சென்ற கும்மிடிப்பூண்டி மற்றும் சிப்காட் தீயணைப்பு வீரர்கள், ஐந்து மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். இதில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பழைய பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.மின் கம்பி அறுந்து, கிடங்கின் மேல் விழுந்ததால், மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.