திருத்தணி கோவிலில் மதி அங்காடி திறப்பு
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, மதி அங்காடி திட்டம் உருவாக்கப்பட்டது. இந்நிலையில், சுற்றுலாத்தலமான திருத்தணி முருகன் மலைக்கோவில் வளாகத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், மதி அங்காடி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்கடையின் திறப்பு விழா, மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் செல்வராணி தலைமையில் நேற்று நடந்தது. இதில், திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், முருகன் கோவில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர் குழு உறுப்பினர் சுரேஷ்பாபு ஆகியோர் பங்கேற்று, மதி அங்காடியை திறந்து வைத்து, விற்பனையை துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில், திருத்தணி தாசில்தார் மலர்விழி, ஊரக வளர்ச்சி திருத்தணி கோட்ட உதவி பொறியாளர் கோமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் உட்பட, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.