உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நகராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைக்க கிராம சபையில்...எதிர்ப்பு!:கருப்பு கொடியேற்றி, மறியல் நடத்தி மக்கள் புறக்கணிப்பு

நகராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைக்க கிராம சபையில்...எதிர்ப்பு!:கருப்பு கொடியேற்றி, மறியல் நடத்தி மக்கள் புறக்கணிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைப்பதற்கு பல இடங்களில் நடந்த கிராம சபை கூட்டத்தை மக்கள் புறக்கணித்தும், வீடுகளில் கருப்பு கொடியேற்றியும், சாலை மறியல் நடத்தி தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். அதிகாரிகள், போலீசார் பேச்சு நடத்தியும், கிராம சபை நடத்த முடியாமல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிலர் திரும்பி சென்றனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், நாட்டின், 76வது குடியரசு தின விழாவையொட்டி, 526 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் தனி அலுவலர்கள் தலைமையில் நேற்று நடந்தது. பல ஊராட்சிகளில் கிராம சபை கூட்டத்திற்கு மக்கள் வராமல் புறக்கணித்தனர். ஊராட்சிகளை நகராட்சி, பேரூராட்சிகளுடன் இணைக்கக் கூடாது என மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.பூந்தமல்லி ஒன்றியம், திருமணம் ஊராட்சியில், மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில், சிறுபான்மையினர் நலன் மற்றும் அயல்நாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் நாசர், பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்றனர்.அமைச்சர் நாசர் பேசியதாவது :''கடந்த காலங்களில் ஆண்டிற்கு நான்கு முறை நடைபெற்று வந்தது. முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் மக்களின் குறைகளை தீர்வு காண, ஆண்டிற்கு ஆறு முறை கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது' என்றார்.திருவள்ளூர் ஒன்றியத்தில், 38 ஊராட்சிகளில் நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. இதில், திருவள்ளூர் நகராட்சியுடன், வெங்கத்துார், சேலை, திருப்பாச்சூர், ஈக்காடு, காக்களூர், சிறுவானுார் உள்ளிட்ட 9 ஊராட்சிகள் இணைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்தனர்.பூண்டி ஒன்றியம், திருப்பாச்சூரில், கிராமவாசிகள் சார்பில் துணை தலைவர் கெத்சியாள், திருவள்ளூர் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்தார். இதே போல, காக்களூர், ஈக்காடு உள்ளிட்ட ஊராட்சிகளிலும், நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தடப்பெரும்பாக்கம் மற்றும் கொடூர் ஆகிய ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் கொடூர் ஊராட்சி மக்கள், பொன்னேரி நகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமசபை கூட்டத்தை புறக்கணித்தனர்.தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில், முன்னாள் துணை தலைவர் சபிதா பாபு, சமூக ஆர்வலர்கள் மதன், பாலசந்தர், நாகராஜ் உள்ளிட்டோர் நகராட்சியுடன் ஊராட்சியை இணைக்கூடாது என தடப்பெரும்பாக்கம் - கிருஷ்ணாபுரம் நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர்.கடம்பத்துார் ஒன்றியம், வெங்கத்துார் ஊராட்சியில், கடம்பத்துார் ஒன்றிய அலுவலக பொறியாளர் பரந்தாமன் தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மணவாள நகர் பகுதியில் மழைநீர் கால்வாயில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சென்று கூவம் ஆற்றில் கலக்கிறது. இதை தடுக்க சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றி நிலத்தடி நீர் மற்றும் மண்வளம் மாசுபடுவதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருத்தணி ஒன்றியத்தில் உள்ள, 27 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, சந்தானம் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் தலைமையில் நடந்தது.பெரும்பாலான ஊராட்சிகளில், சாலை வசதி, குடிநீர் பிரச்னை, தனிநபர் ஆக்கிரமிப்புகள், குப்பை தினமும் அள்ள வேண்டும் என, அடிப்படை வசதிகள் கேட்டு கிராம சபையில் கோரிக்கை வைத்தனர்.லட்சுமாபுரம் ஊராட்சியில், தடம் எண்:'டி45' என்ற அரசு டவுன் பேருந்தை, குன்னத்துார் பேருந்து நிறுத்தம், தாசிரெட்டிகண்டிகை பேருந்து நிறுத்தம் சொட்டநத்தம் கிராம வழியாக அரசு பேருந்து இயக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.ஆர்.கே.பேட்டை ஒன்றியம், கோபாலபுரம் ஊராட்சியில் அனைத்து பகுதியிலும் குடிநீர் வினியோகம் சீராக மேற்கொள்ள வேண்டும் என, பெண்கள் கோரிக்கை விடுத்தனர்.கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட, 61 ஊராட்சிகளில், நேற்று கிராம சபை கூட்டம் நடந்தன. பெத்திக்குப்பம் மற்றும் புதுகும்மிடிப்பூண்டி ஆகிய இரு ஊராட்சிகள் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியுடன் இணைப்பதற்கு இரு ஊராட்சி மக்களும் கிராம சபையில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர்.சோழவரம் ஒன்றியம், மல்லியங்குப்பம் ஊராட்சியை, ஆரணி பேரூராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட, 42 ஊராட்சிகளில், நேற்று, கிராம சபை கூட்டம் நடந்தது. ராமாபுரம் ஊராட்சி, இருளர் காலனி மக்கள் தங்களுக்கு கலைஞர் கனவு இல்லம் வழங்க வேண்டும். சிமென்ட் கல் சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.பூண்டி ஒன்றியம், அனந்தேரி ஊராட்சியில், செயலர் செல்லையா தலைமையில் நடந்த கூட்டத்தில், அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நந்திமங்களம் ஊராட்சியில் செயலர் பாபு தலைமையில் நடந்த கூட்டத்தில், அபாயகரமான மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும்.கச்சூர் ஊராட்சியில், செயலர் சுரேஷ் தலைமையில் கூட்டத்தில், இளைஞர்கள் விளையாட்டு மைதானம் கேட்டு மனு கொடுத்தனர்.இதேபோல், ஒன்றியத்தில் உள்ள மற்ற ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.

வீடுகளில் கருப்பு கொடி

திருத்தணி ஒன்றியம், கார்த்திகேயபுரம் ஊராட்சியில், நேற்று, கிராம சபை கூட்டம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடத்துவதற்கு வந்தனர். அப்போது ஊராட்சி மக்கள், எங்கள் ஊராட்சியை, திருத்தணி நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என, எதிர்ப்பு தெரிவித்து வீடுகள் தோறும் கருப்பு கொடி கட்டி கிராம சபையில் பங்கேற்காமல் புறக்கணித்தனர். அதிகாரிகள் மற்றும் போலீசார் மதியம் வரை பேச்சு வார்த்தை நடத்தியும் கிராம சபைக்கு மக்கள் வரவில்லை.-- -நமது நிருபர் குழு- -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி