குடிநீர் குழாய் செல்லும் பாதையில் கழிவுநீர் கால்வாய் அமைக்க எதிர்ப்பு
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், வீரராகவபுரம் கிராமத்திற்கு உட்பட்டது, வீரராகவபுரம் குறுக்கு தெரு. இங்கு, கழிவுநீர் கால்வாய் அமைக்க, மூன்று மாதங்களுக்கு முன் டெண்டர் விடப்பட்டது.ஒன்றிய பொது நிதியில், 20 மீட்டர் நீளத்திற்கு, 45,000 ரூபாய் மதிப்பில், கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி, கடந்த மாதம் துவங்கியது.இந்நிலையில், அதே பகுதியில் வசிக்கும் வினோத்குமார், 43, என்பவர், நேற்று திருவாலங்காடு பி.டி.ஓ.,விடம் புகார் மனு அளித்தார்.அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படும் தடத்தின் கீழ், குடிநீர் குழாய் செல்கிறது. எனவே, பணியை நிறுத்துமாறும், மாற்று இடத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும்படியும், கடந்த மாதம் ஊராட்சி தலைவரிடம் கேட்டுக்கொண்டோம். அதன்படி பணி நிறுத்தப்பட்டது.தற்போது, அதே இடத்தில் கால்வாய் அமைக்கும் பணி, மீண்டும் நடந்து வருகிறது. இதனால், குடிநீரில் கழிவுநீர் கலக்கும் ஆபத்து உள்ளதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, குடிநீர் குழாய் செல்லும் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.