இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டி
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஊராட்சியில் ஸ்ரீகிருஷ்ணாபுரம் அமைந்துள்ளது. போக்குவரத்து வசதி இல்லாத இக்கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராமவாசிகளின் குடிநீர் தேவைக்காக, விநாயகர் கோவில் எதிரே மற்றும் அரசு தொடக்க பள்ளி வளாகத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.இதில், விநாயகர் கோவில் எதிரே உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி உரிய பராமரிப்பு இன்றி சீரழிந்து வருகிறது. இந்த மேல்நிலை குடிநீர் தொட்டியின் துாண்கள் சேதமடைந்துள்ளன.கான்கிரீட் உதிர்ந்து இரும்பு கம்பிகள் துருப்பிடித்துள்ளன.இதனால், எந்த நேரத்திலும் மேல்நிலை குடிநீர் தொட்டி இடிந்து விழும் அபாயம் உள்ளது. மேலும், அருகே வசிக்கும் குடும்பத்தினர் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். எனவே, பகுதிவாசிகளின் பாதுகாப்பு கருதி, பழைய குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.