திருவள்ளூர், திருத்தணியில் இன்று பழனிசாமி பிரசாரம்: ஏற்பாடு தீவிரம்
திருத்தணி: திருவள்ளூர், திருத்தணி சட்டசபை தொகுதிகளில் அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி இன்று மாலை பிரசாரம் செய்கிறார். இதையொட்டி, அ.தி.மு.க., நிர்வாகிகள் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அ.தி.மு.க., பொதுச்செயலரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி, 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' எனும் பிரசாரம் தமிழகம் முழுதும் மேற்கொண்டு வருகிறார். இன்று மாலை திருவள்ளூர் மற்றும் திருத்தணி சட்டசபை தொகுதிகளில் பிரசாரத்தை செய்ய உள்ளார். இதற்காக திருத்தணி சட்டசபை தொகுதியில், திருத்தணி - சித்துார் மாநில நெடுஞ்சாலை, வீரகநல்லுார் பேருந்து நிறுத்தம் அருகே, அ.தி.மு.க., அமைப்பு செயலரும், முன்னாள் அரக்கோணம் எம்.பி.,யுமான திருத்தணி கோ.அரி தலைமையில் கட்சி நிர்வாகிகள் கூட்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். நேற்று காலை, அரி, ஒன்றிய செயலர்கள் இ.என்.கண்டிகை ரவி, பள்ளிப்பட்டு சீனிவாசன், ஆர்.கே.பேட்டை குமார், திருத்தணி நகர செயலர் சவுந்தர்ராஜன், பொதட்டூர்பேட்டை பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட இளைஞர் அணி ஜெயசேகர்பாபு ஆகியோர் கூட்டம் நடக்கும் இடத்தை பார்வையிட்டனர். மேலும் பழனிசாமியை வரவேற்க திருத்தணி அரசு கலைக் கல்லுாரி பகுதியில் இருந்து பைபாஸ் ரவுண்டானா, திருத்தணி - சித்துார் மாநில நெடுஞ்சாலை என, 15 கி.மீ., துாரம் சாலையின் இருபுறமும் கட்சி கொடிகள், பிளக்ஸ் பேனர்கள், கட் அவுட்கள் வைத்துள்ளனர். இன்று மாலை, 4:00 மணியளவில் திருத்தணியிலும், மாலை, 6:00 மணியளவில் திருவள்ளூரிலும் பழனிசாமி பிரசாரம் செய்கிறார். திருவள்ளூர் சட்டசபை தொகுதியில், திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில் உள்ள ஐ.சி.எம்.ஆர்., மைதானத்தில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., செயலர் பி.வி.ரமணா தலைமையில் நடக்கிறது. கூட்ட ஏற்பாடுகளை மாவட்ட செயலர் ரமணா, மாணவரணி மாவட்ட செயலர் பாலாஜி, பூண்டி ஒன்றிய செயலர் மாதவன், பூண்டி ஒன்றிய துணை செயலர் விஜி, எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட துணை செயலர் மோகன்ராவ். பட்டரை பெரும்புதுார் கிளை செயலர் சத்தியமூர்த்தி, ஒன்றிய தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலர் அரி, திருப்பாச்சூர் கிளை செயலர் வசந்தகுமார், ஜெ., பேரவை வள்ளியம்பேட்டை சீனிவாசன், கடம்பத்துார் ஒன்றிய அவைத்தலைவர் சிற்றம்பாக்கம் சீனிவாசன், கடம்பத்துார் ஒன்றிய இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலர் ரஜினி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.