ஊராட்சி செயலர் போராட்டம் அடிப்படை வசதிகள் பாதிப்பு
ஊத்துக்கோட்டை: ஓய்வூதிய திட்டம் கேட்டு ஊராட்சி செயலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஊராட்சிகளில், ஊராட்சி செயலர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், நில வரி, வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் வரிகளை வசூல் செய்தல், சாலைகளில் மின்விளக்கு அமைத்தல், கழிவுநீர் கால்வாய் அமைத்தல், சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். சமீ பத்தில், அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு புதிய ஒய்வூதிய திட்டத்தை அறிவித்தது. இதில், ஊராட்சி செயலர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இதன் காரணமாக, கடந்த 6ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி செயலர்களும், சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஊராட்சி செயலர்களின் போராட்டம் முடிவிற்கு வந்தால் மட்டுமே, அடிப்படை வசதிகள் மேற்கொள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.