2 ஆண்டுகளாக பாராமுகம் அங்கன்வாடி மையம் காத்திருப்பு
திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம் என்.என்.கண்டிகை கிராமத்தில், அரசு பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் கட்டடம் பழுதடைந்ததால், அங்கன்வாடி கட்டடம் இடித்து அகற்றப்பட்டது.அதே இடத்தில் ஒன்றிய நிர்வாகம் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் வாயிலாக, 2019- - 20ம் ஆண்டு, 9.08 லட்சம் ரூபாயில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம், 2022ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.ஆனால், புதிய அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு விழா காணாமல், இரு ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. இதனால், அரசு பணம் வீணாவதுடன், கட்டடமும் பழுதாகி விடும் அபாயம் உள்ளது.மேலும், அங்கன்வாடி மையத்திற்கு மின் இணைப்பும் ஊராட்சி நிர்வாகம் வாங்காமல் உள்ளது. தற்போது அங்கன்வாடி மையம் ஊராட்சி சேவை மைய கட்டடத்தில் இயங்கி வருகிறது.சமையல் செய்வதற்கு மட்டும் ஒரு சிறிய அறையை பயன்படுத்தி வருகின்றனர். குழந்தைகள் சேவை மைய கட்டட நுழைவாயிலில் உட்கார்ந்து செல்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.