திருவள்ளூரில் ரூ.43 லட்சத்தில் அமைக்கப்பட்ட பூங்கா திறப்பு
திருவள்ளூர், திருவள்ளூர் நகராட்சி உள்ள 16வது வார்டில், 43 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட பூங்கா பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.திருவள்ளூர் நகராட்சியில், ஜெயா நகர், வி.எம்.நகர், ராஜாஜிபுரம், என்.ஜி.ஓ., காலனி, எம்.ஜி.எம்., நகர், ஜவஹர் நகர், விக்னேஷ்வரா நகர் உள்ளிட்ட பகுதிகளில், 120 இடங்களில் பூஙகாவிற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் உள்ளன.தற்போது, என்.ஜி.ஜி.ஓ., காலனி, எம்.ஜி.எம்., நகர், வைஷ்ணவி நகர், வரதராஜ நகர், பாரதியார் நகர், ஏ.எஸ்.பி., நகர் மற்றும் பத்மாவதி நகர் ஆகிய ஏழு இடங்களில் மட்டுமே பூங்கா கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது.இந்த நிலையில், 16வது வார்டுக்கு உட்பட்ட சங்கீத் கார்டன் பகுதியில், 43 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் அமைக்கப்பட்ட இங்கு, சிறுவர் விளையாடும் இடம், நடைபயிற்சி பாதை, காவலர் தங்கும் அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.பணி நிறைவடைந்த நிலையில், பூங்கா திறப்பு விழா, நகராட்சி தலைவர் உதயமலர் தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் தாமோதரன் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக, திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன் பங்கேற்று, பூங்காவை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதையடுத்து, நகராட்சியில் பூங்காவின் எண்ணிக்கை, எட்டாக உயர்ந்துள்ளது.