பராமரிப்பு இல்லாத பாலம்: சீரமைக்க மக்கள் கோரிக்கை
பொன்னேரி: மடிமைகண்டிகையில் கால்வாயின் குறுக்கே, பராமரிப்பின்றி சேதமடைந்துள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னேரி அடுத்த உப்பளம் - மடிமைகண்டிகை கிராமங்களுக்கு இடையே நீர்வரத்து கால்வாய் செல்கிறது. இதன் குறுக்கே வாகன போக்குவரத்திற்காக கட்டப்பட்டுள்ள பாலம் பராமரிப்பின்றி உள்ளது. பாலத்தின் பக்கவாட்டு கான்கிரீட் கட்டுமானங்கள் சேதமடைந்துள்ளன. மேலும், கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து வருவதால், பாலம் பலவீனமடைந்து வருகிறது. பாலத்தின் இருபுறமும் பக்கவாட்டு தடுப்புச்சுவர்களும் சேதமடைந்து உள்ளன. இதனால், இரவு நேரங்களில் பாலத்தை கடக்கும்போது, வாகன ஓட்டிகள் அசம்பாவிதங்களில் சிக்கும் அபாயம் உள்ளது. மடிமைகண்டிகை, வீரங்கிமேடு, ஆசானபூதுார், அரவாக்கம், மத்ராவேடு, ஏருசிவன் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களின் பிரதான போக்குவரத்து பாலமாக உள்ளதால், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், தடுப்புச்சுவர்களை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.