சுகாதார வளாகம் இல்லாததால் கே.ஜி.கண்டிகை மக்கள் அவதி
திருத்தணி:திருத்தணி—சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் கே.ஜி.கண்டிகை ஊராட்சி உள்ளது. இங்கு, மாநில நெடுஞ்சாலை பகுதியில், 200க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன. மேலும், நான்கு திருமண மண்டபங்கள், இரண்டு வங்கிகள், ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி, இரண்டு தனியார் மேல்நிலைப் பள்ளி மற்றும் இரண்டு டாஸ்மாக் கடைகள் ஆகியவை இயங்கி வருகின்றன.தவிர கே.ஜி.கண்டிகை சுற்றியுள்ள, 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மக்கள் தங்கள் அத்திவாசிய பணிகள் காரணமாக திருத்தணி ,சோளிங்கர் மற்றும் பள்ளிப்பட்டு மார்கத்திற்கு செல்வதற்கு கே.ஜி. கண்டிகை பேருந்து நிறுத்தத்திற்கு வந்து அங்கிருந்து பேருந்து மூலம் மேற்கண்ட இடத்திற்கு தினமும் சென்று வருகின்றனர்.அதிகாலை, 4:30 மணி முதல் இரவு, 11:00 மணி வரை கே.ஜி.கண்டிகை பேருந்து நிறுத்தத்தில் பயணியர் மற்றும் பஜாரில் வாடிக்கையாளர்கள் என, நுாற்றுக்கணக்கான மக்கள் எப்போதும் இருப்பர். ஆனால், இவ்வளவு மக்கள் கூடும் இடத்தில், இதுவரை ஊராட்சி நிர்வாகம் சார்பில் பொதுகழிப்பறை கட்டப்படவில்லை. இதனால் மக்கள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். பெண்கள் சிரமப்படு கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து பொதுகழிப்பறை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.