வயலுாரில் சேதமடைந்த சாலை சீரமைக்க மக்கள் ஆர்ப்பாட்டம்
வயலுார்: சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி, வயலுார் பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது வயலுார் ஊராட்சி. இங்கிருந்து, சூரகாபுரம் வழியாக மும்மடிக்குப்பம், முதுகூர் செல்லும் 4 கி.மீ., சாலை உள்ளது. இச்சாலையை, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலையை, இரண்டு ஆண்டுகளுக்கு முன் நெடுஞ்சாலை துறையிடம், ஒன்றிய நிர்வாகத்தினர் ஒப்படைத்தனர். ஆனால், தற்போது வரை இச்சாலையை நெடுஞ்சாலை துறையினர் சீரமைக்கவில்லை. தற்போது, இச்சாலை மிகவும் சேதமடைந்து, பல்லாங்குழியாக மாறியுள்ளதால் சூரகாபுரம் மற்றும் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும் ஒன்றிய நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சூரகாபுரம் பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர், நேற்று காலை 8:00 மணியளவில் சேதமடைந்த சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மப்பேடு போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். பின் போலீசார், 'சேதமடைந்த சாலை விரைவில் சீரமைக்கப்படும்' என, உறுதி கூறியதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.