ஆக்கிரமிப்பால் சுருங்கிய நெடுஞ்சாலை ஊத்துக்கோட்டையில் மக்கள் அவதி
ஊத்துக்கோட்டை, தமிழக - ஆந்திர எல்லையில் உள்ளது ஊத்துக்கோட்டை பேரூராட்சி. சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருவள்ளூர் - சத்தியவேடு மாநில நெடுஞ்சாலை இணையும் இடத்தில் உள்ளது. இங்கு, தாசில்தார், டி.எஸ்.பி., அலுவலகம் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன.சென்னையில் இருந்து ஆந்திர மாநிலம், புத்துார், நகரி, திருப்பதி, கடப்பா, கர்நுால், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் வாகனங்கள் ஊத்துக்கோட்டை பஜார் வழியே செல்கின்றன.தினமும், 20,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் இச்சாலையில் பயணிக்கின்றன. இதில் ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்துள்ளனர். இதனால், தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள், பாதசாரிகள், மாணவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். அதிகாரிகள் அலட்சியம்...
இங்கு தாசில்தார், டி.எஸ்.பி., போக்குவரத்து போலீஸ் என, அனைத்து அரசு துறைகள் இருந்தும் போக்குவரத்து நெரிசலை யாரும் கண்டு கொள்வதில்லை. சாலையோரம் ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளவர்களிடம் பேரூராட்சி நிர்வாகம் வரி வசூல் செய்கிறது.இதனால், வியாபாரிகள் சுதந்திரமாக ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே, கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஊத்துக்கோட்டையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.