தொழுநோயாளிகள் குடியிருப்பில் சாலையை சீரமைக்க கோரி மனு
பொன்னேரி:தொழுநோயாளிகள் குடியிருப்பு பகுதிக்கான சாலையை சீரமைக்க கோரி, நகராட்சி நிர்வாகத்திடம் குடியிருப்புவாசிகள் மனு அளித்தனர். பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட குண்ணம்மஞ்சேரி இந்திரா நகர் பகுதியில், தொழுநோயாளிகளுக்கான குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. இங்கு, 80க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கான சாலை, 20 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. தொழுநோயாளிகள் கரடு முரடான பாதையில் சிரமத்துடன் பயணிக்கின்றனர். அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கான சாலைகள் புதிதாக அமைக்கப்படும் நிலையில், தங்கள் பகுதி புறக்கணிக்கப்படுவதாக கூறுகின்றனர். நேற்று, 30க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள், இச்சாலையை சீரமைக்கக் கோரி, பொன்னேரி நகராட்சி அலுவலகத்திற்கு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. ஜல்லிக் கற்கள் பெயர்ந்துள்ளன. தொழுநோயாளிகளான எங்களால், அதில் பயணிப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, சாலையை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.