பிரேயர் கோப்பை கிரிக்கெட் பிங்க் வாரியர்ஸ் அபார வெற்றி
சென்னை: 'பிரேயர் கோப்பை' கிரிக்கெட் போட்டியில், பிங்க் வாரியர்ஸ் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், மகளிருக்கான 'பிரேயர் கோப்பை' ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. புதுப்பாக்கம் வி.பி.நெஸ்ட் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில், 'பிங்க் வாரியர்ஸ்' அணியும் 'சில்வர் ஸ்ட்ரைக்கர்ஸ்' அணியும் மோதின. 'டாஸ்' வென்ற சில்வர் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பிங்க் வாரியர்ஸின் அபர்ணா, ஹாசினி ஆகியோர் அரைசதம் அடித்து, அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அபர்ணா, 61, ஹாசினி, 58, ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்ததால், அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 45 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 216 ரன்கள் வெற்றி என்ற இலக்கை துரத்திய 'சில்வர் ஸ்ட்ரைக்கர்ஸ்' அணி, துவக்கத்திலே விக்கெட்களை இழந்தது. அணி வீராங்கனை ஐஸ்வர்யா, அரைசதம் கடந்து 84 ரன்கள் குவித்தார். மற்ற வீராங்கனையர் சரியான பார்ட்னர்ஷிப் கொடுக்காததால், அந்த அணி 43.1 ஓவர்களில் 139 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனால் 'பிங்க் வாரியர்ஸ்' அணி, 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.