சீமாவரம் ஆற்று பால சுவரில் செடிகள் வளர்ந்து பலவீனம்
மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த, சீமாவரம் பகுதியில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலையில், ஆற்றுப்பாலம் அமைந்து உள்ளது.காட்டுப்பள்ளி, அத்திப்பட்டு புதுநகர் பகுதிகளில் உள்ள துறைமுகங்கள், கப்பல்கட்டும் தளம், எரிவாயு முனையங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் இந்த பாலத்தை கடந்து சென்று வருகின்றன.இந்த பாலத்தின் பக்கவாட்டு பகுதிகளில், மரம், செடிகள் வளர்ந்து உரிய பராமரிப்பு இன்றி கிடக்கிறது. இணைப்பு சாலையின் சரிவுப் பகுதிகளிலும் இதே நிலைதான் உள்ளது.பால சுவரின் கான்கிரீட் கட்டுமானங்களுக்கு இடையே செடிகள் வளர்ந்து வருவதால், அதன் உறுதித்ன்மையை பலவீனப்படுத்தி வருகிறது. பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு சென்று வரும் வாகனங்களின் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாலம் பராமரிப்பு இன்றி கிடப்பது வாகன ஓட்டிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.மீஞ்சூர் - வண்டலுார் சாலையில், ஐந்து சுங்கச்சாவடிகள் வாயிலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், பராமரிப்பு பணிகளில் அலட்சியம் காட்டப்படுவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.