பைக் மீது லாரி மோதி பிளஸ் 2 மாணவர் பலி
பண்ணுார்:பைக் மீது டாரஸ் லாரி மோதி, பிளஸ் ௨ மாணவர் பலியானார். மற்றொரு மாணவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். காஞ்சிபுரம் மாவட்டம் காந்துார் பகுதியைச் சேர்ந்தவர் பரணி, 17. மப்பேடு அடுத்த பண்ணுார் பகுதியில் உள்ள டான்பாஸ்கோ அரசு நிதியுதவி பெறும் பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று காலை, தன் உறவினருக்கு சொந்தமான 'யமஹா ஆர் 15' பைக்கில் பள்ளிக்கு சென்றார். மதியம் 1:30 மணியளவில் உடன் படிக்கும் நண்பரான, பிஞ்சிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஹேம்நாத், 17, என்பவருடன், சுங்குவார்சத்திரம் சென்றுவிட்டு பைக்கில் வந்து கொண்டிருந்தார். பள்ளி அருகே டாரஸ் லாரியை முந்திச் செல்லும் போது, பைக்கின் சைடு மிரர் லாரியில் உரசியதில், நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில், லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே பரணி உயிரிழந்தார். ஹேம்நாத் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின், லாரியை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.