சாலையில் சுவர் அமைப்பு போலீசார் தடுத்து நிறுத்தம்
ஆரணி:சோழவரம் ஒன்றியத்திற்கு உடப்பட்டது வடக்கநல்லுார் கிராமம். அங்கு, 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆரணி -- புதுவாயல் சாலையில், அமைந்துள்ள செவிட்டு பனப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, 500 மீட்டர் தொலைவில் வடக்கநல்லுார் கிராமம் அமைந்துள்ளது.அந்த இடைப்பட்ட பாதையை, பல ஆண்டு காலமாக கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதில், தனியாருக்கு சொந்தமான இடம் இருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில், அந்த பாதையின் குறுக்கே சம்பந்தப்பட்ட தனியார் சார்பில், , தடுப்பு சவர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட இருந்தது.அதற்காக, சிமென்ட் கற்கள் குவிக்கப்பட்டிருந்தன. தகவல் அறிந்து சென்ற போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சுவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.சம்பந்தப்பட்ட நபர்களுடன் பேச்சு நடத்தினர். நீதிமன்றத்தை நாடி தீர்வு காண வேண்டும் என, தெரிவித்து அனுப்பி வைத்தனர். அதன்பின், வடக்கநல்லுார் சாலையில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டன.