ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால் பொதட்டூர்பேட்டை கர்ப்பிணியர் அவதி
பொதட்டூர்பேட்டை;பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால், கர்ப்பிணியர் அவதிப்பட்டு வருகின்றனர். பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில், 30,000 பேர் வசித்து வருகின்றனர். பொதட்டூர்பேட்டையில் அரசு பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. ஆனால், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால், கர்ப்பிணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதியில் மட்டுமே அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளதால், பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த கர்ப்பிணியர், பள்ளிப்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட சொரக்காய்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வருகின்றனர். சொரக்காய்பேட்டைக்கு போதுமான போக்குவரத்து வசதி இல்லாததால், ஷேர் ஆட்டோவில் பயணிக்கின்றனர். கர்ப்பிணியரின் மருத்துவ பதிவேடுகள் சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இதனால், கர்ப்ப காலம் துவங்கி பிரசவம் வரை கர்ப்பிணியர், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தொடர்ச்சியாக சென்று வருகின்றனர். சொரக்காய்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் கர்ப்பிணியருக்காக ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனை முகாம் நடக்கிறது. இதற்காக, 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணியர் வந்து செல்கின்றனர். பேருந்து மற்றும் ஆட்டோக்களுக்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. கர்ப்பிணியரின் சிரமத்தை கருத்தில் கொண்டு, பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புதிதாக துவங்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.