பிரதமர் விவசாயி கவுரவ திட்டம் வரும் 31 வரை சிறப்பு முகாம்
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் பிரதமர் விவசாய கவுரவ திட்டத்தில், விவசாயிகள் சுயவிபரம் பதிவு செய்ய வரும் 31ம் தேதி வரை சிறப்பு முகாம் நடக்கிறது.திருவள்ளூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கலாதேவி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி விவசாயி கவுரவ நிதி திட்டத்தில் தகுதியுடைய அனைத்து விவசாயிகள் பயன்பெறும் வகையில், வரும் 31ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் பொது சேவை மையங்களில் முகாம் நடைபெறும்.நில உடைமை பதிவேற்றம் மற்றும் 'ekyc' பதிவேற்றம் செய்யாத விவசாயிகள், சம்பந்தப்பட்ட வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தையோ அல்லது பொது சேவை மையத்தையோ அணுகி பயன்பெறலாம். மேலும், வங்கி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள், சம்பந்தப்பட்ட வங்கி கிளையையோ அல்லது தபால் நிலையத்தையோ அணுகி பயன்பெறலாம்.நில உடைமை பதிவேற்றம் செய்த விவசாயிகளுக்கு மட்டுமே 20வது தவணை விடுவிக்கப்படும். இத்திட்டத்தில் தகுதியுடைய மற்றும் பதிவு செய்யாத விவசாயிகள் ஆதார் எண், நில விபரம், வங்கி கணக்கு விபரம் ஆகியவற்றை பயன்படுத்தி, பி.எம்.கிசான் வலைதளத்தில் தாங்களாகவோ அல்லது பொது சேவை மையத்தையோ அணுகி பதிவு செய்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.