திருத்தணியில் ஏரிகளை பராமரிப்பதில் சிக்கல் 3 ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு நிறுத்தம்
திருத்தணி:திருத்தணி - சித்துார் சாலையில் நீர்வளத் துறையின் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் பணிபுரியும், ஒரு உதவி செயற்பொறியாளர், மூன்று உதவி பொறியாளர்கள் வாயிலாக திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய மூன்று ஒன்றியங்களில் உள்ள மொத்தம், 79 ஏரிகளை பராமரித்து வருகின்றனர்.இதுதவிர, கொசஸ்தலை ஆறு மற்றும் நந்தியாறு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் சேமிக்கவும், ஏரிகளுக்கு தண்ணீர் சேமிக்க, ஆறுகளில் இருந்து நீர்வரத்து கால்வாய் வாயிலாக தண்ணீர் கொண்டு வரப்படுவதற்கும் ஆறுகள் இடையே தடுப்பணை கட்டுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.இதுதவிர ஏரிகளை பழுது பார்த்தல், பராமரிப்பு பணிகளுக்கு நிதி ஓதுக்கீடு செய்யப்படும். அதாவது மதகு, கடைவாசல், கரைபலப்படுத்தல், நீர்வரத்து கால்வாய் போன்ற சீரமைப்பு பணிகள் ஆண்டுதோறும் நீர்வளத் துறையினர் மேற்கொள்கின்றனர். இதற்காக ஆண்டுக்கு குறைந்த பட்சம், 25 லட்சம் ரூபாய் முதல், 1.50 கோடி ரூபாய் வரை அரசு நிதி ஓதுக்கீடு செய்யும்.ஆனால், 2022 - 23ம் ஆண்டு முதல், இதுவரை பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் பல ஏரிகளில் மதகு, கடைவாசல் சேதம், நீர்வரத்து கால்வாய் சீரமைப்பு போன்ற பணிகளை மேற்கொள்ள முடியாமல் நீர்வளத் துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் விவசாயம் நலன் கருதி ஏரிகளை பராமரிப்பதற்கும், பழுது பார்ப்பதற்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்து தரவேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.இது குறித்து திருத்தணி நீர்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஆண்டுதோறும் ஏரிகள் சீரமைப்பு பணிகளுக்கு போதிய நிதியுதவி வழங்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பி வைக்கிறோம். ஆனால், நிதி ஒதுக்கீடு செய்து அரசின் கொள்கை முடிவாகும்' என்றார்.