உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் பேருந்து சிறைபிடிப்பால் பரபரப்பு

போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் பேருந்து சிறைபிடிப்பால் பரபரப்பு

கும்மிடிப்பூண்டி:பிரேத பரிசோதனை செய்வதற்கான ஆவணங்கள் தயாரிக்க போலீசார் தாமதித்ததால், பொறுமையிழந்த உறவினர், பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். கும்மிடிப்பூண்டி அருகே பாதிரிவேடு கிராமத்தில் வசித்தவர் பாஸ்கர், 60. நேற்று முன்தினம் இரவு, பாதிரிவேடு ஊராட்சி அலுவலகம் எதிரே பைக்கில் சென்ற போது, மற்றொரு பைக் மோதி படுகாயமடைந்தார். அங்குள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். வழக்கு பதிந்த பாதிரிவேடு போலீசார், அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று காலை பிரேத பரிசோதனை செய்வதற்கு தேவையான ஆவணங்கள் தயாரித்து வருவதாக, பாதிரிவேடு போலீசார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சிலர், நேற்று காலை காவல் நிலையம் சென்று காத்திருந்தனர். அங்கு, பிரேத பரிசோதனைக்கான ஆவணங்கள் தயாரிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. மதியம் வரை தாமதித்ததால் பொறுமையிழந்த மக்கள், காவல் நிலையம் எதிரே, சென்னை நோக்கி சென்ற ஆந்திர மாநில அரசு பேருந்தை சிறைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 'உடனடியாக ஆவணங்கள் தயாரித்து தரப்படும்' என, போலீசார் சமாதானம் செய்ததால், பேருந்தை விடுவித்து, ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர். இதனால், 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்தது. தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்கான ஆவணங்கள் வழங்கப் பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ